the life divine

பரிபூரண வாழ்வு

1. அத்தியாயம்

மனித ஆர்வம்

.
தொலைதூரத்தில் கடந்து செல்வனவற்றின்
இலக்குகளை அவள் பின்தொடர்கிறாள். நித்யகால தொடர்ச்சியாக வரப்போகும் விடியல்களில் முதன்மையானவளும் அவளே.
உசை (usha) விரிவு கொண்டு வாழ்ந்துகொண்டிருப்பதை வெளிக்கொணர்கிறாள், இறந்த ஏதேனுமொன்றை உயிர்ப்பிக்கின்றாள்……….கடந்த கால சுடர் விடியல்களோடும், தற்போது சுடர்விட வேண்டிய விடியல்களோடும் அவள் இசைவுறும் போது அவளின் நோக்கமென்ன?. முன்னோர்களின் விடியலை அவள் விரும்புகிறாள், அவர்களின் ஒளியை நிறைவு செய்கிறாள்; தன்னுடைய பிரகாசத்தை நீட்டித்து வருகைக்காக காத்திருப்பனவற்றுடன் உரையாடத்துவங்குகிறாள்.
குத்ஸ ஆங்கீரஸ- ரிக் வேதம்.*

உலகில் வெளிபட்டுள்ள இறை சக்தியின் மேன்மையான பிறப்பு முத்தன்மையானது, அவை உண்மையானவையும்
விரும்பத் தக்கவையுமாகும் ; எல்லையின்மையினுள்ளே அவன் அப்பட்டமாகவே நகர்கிறான், தூய்மையாக பிரகாசிக்கின்றான்,
ஒளிர்கின்றான், நிறைவுசெய்கிறான். அழிவனவற்றுள் அமரத்தன்மையானதும், உண்மையை தன்னுள் கொண்டதுமான கடவுள் , நம்முடைய இறை சக்திகளில் வெளிக்கொணரும் ஆற்றலாக உள்முகமாக ஊன்றியிருக்கின்றது. உயரே எழுச்சியுற்று, ஒ ஆற்றலே, திரைகளனைத்தையும் கிழித்தெறி, கடவுட்தன்மையை எம்முள்ளே பரிணமிக்க செய்.
வாமதேவம்-ரிக்வேதம்.

மனிதனின் சிந்தனை உச்சபட்சமாக தன் அகப்பார்வையால் எதனை யூகிக்க முடிகிறதோ அது குறித்த அவனது வெகுமுந்தைய நாட்டம் தவிர்க்கப்படமுடியாததாகவும் இறுதியானதாகவும் தோன்றுகிறது. நீண்ட கால சந்தேகவாதத்தையும் தாண்டி அது பிழைத்திருக்கின்றது, ஒவ்வொரு முறை தடை செய்யப்பட்ட பின்பு திரும்பவும் வந்திருக்கின்றது. கடவுட்தன்மையை பரிணமிக்க செய்வதாகவும், ஒழுங்கை நோக்கிய உந்துதலாகவும், தூய உண்மையையும், கலப்பற்ற ஆனந்தத்தை தேடுவதாகவும், ரகசிய அமரத்துவத்தை நோக்கிய உணர்வாகவும் அது தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. இடைவிடாத இந்த ஆர்வத்திற்கு மனித அறிவின் பண்டைய கால விடியல்கள் சாட்சியை விட்டு சென்றிருக்கின்றன; தற்போது இயற்கையின் புறவய செயல்பாடுகளை வெற்றிகரமாக ஆய்ந்துணர்ந்து திகட்டிப்போன ஒரு மனித இனம், திருப்தியடையாமல் ஆதி ஏக்கத்தை நோக்கி திரும்பிச்செல்வதற்காக தன்னை தயார் செய்கிறது. கடவுள், ஒளி, சுதந்திரம், அமரத்துவம் ஆகிய இவற்றையே தன் இறுதியாக ஞானம் உறுதிகூறுகின்றது.

இடைவிடாது தொடர்ந்து வரும் இந்த கருத்துருவங்கள் (ideals) ஒரே சமயத்தில் மனித இனத்தின் நடைமுறை அனுபவத்திற்கு முரணானதாகவும், ஆனால் அதற்கு அதீதமான உயர்ந்த , ஆழ்ந்த அனுபவங்களை உறுதிசெய்வதாகவும் தோன்றுகிறது. அந்த அனுபவங்கள் ஒரு தனி மனிதனின் புரட்சிகரமான முயற்சியினாலோ அல்லது பரிணாமத்தின் பொதுவான வளர்ச்சியினாலோ ஒருங்கமைக்கப்பட்ட அதன் முழுமையில் அடையப்பட வேண்டும்.
விலங்குதன்மையும், அகந்தையும் மிக்க உணர்வினைக் கொண்டு இறைவனை அறியவும், தன்வசமாக்கவும், அவனாக ஆகவும், நம்முடைய மங்கிய, இருளான ஸ்தூல மனதை எங்கும் நிறைந்தொளிரும் அதிமன உணர்வாக மாற்றவும், சட வலியாலும், பிராண துன்பத்தினாலும் சூழப்பட்டு கணப்பொழுதில் மறைந்து போகின்ற திருப்திகளை மாற்றி அமைதியையும் சுய இருப்பான ஆனந்தத்தை நிறுவவும், இயந்திரத்தேவைகளின் மொத்த தொகையாக விளங்கும் உலகில் எல்லையற்ற சுதந்திரத்தைப்பெறவும், இடைவிடாத சிதைவிற்கும் இறப்பிற்கும் உட்பட்ட உடலில் அமர வாழ்வை கண்டுபிடித்து உணரவும் வேண்டும். இதுவே சடத்தில் கடவுளின் வெளிப்பாடகவும், புவி பரிணாமத்தில் இயற்கையின் இலக்காகவும் இருக்கின்றது. சாதாரண சடதள அறிவு உணர்வின் (CONSCIOUSNESS) தற்போதைய அமைப்பையே, அதன் சாத்தியங்களின் இறுதியாகக் கொள்கிறது. உணரப்பட்ட உண்மைகளுக்கும், உணரப்படாத கருத்துருவங்களுக்குமான நேரிடையான முரணே அவற்றின் நிரூபணத்திற்கு எதிரான சடதள அறிவின் வாதமாக இருக்கின்றது. உலகின் செயல்பாடுகளைக் குறித்து நாம் ஒரு திடமான பார்வையைக்
கொள்ளும் போது, அந்த நேரிடையான முரண்பாடு இயற்கையின் அளவிறந்த செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவும், அவளின் முழுமையான அனுமதியின் முத்திரையாகவும் மாறிவிடுகிறது.

இருப்பின் அனைத்து பிரச்சினைகளும் அடிப்படையில் இசைவின் பிரச்சினைகளே. தீர்க்கப்படாத இசைவின்மைகளை உணர்வதாலும், கண்டறியாத ஒற்றுமையையும் ஒருமையும் உள்ளுணர்வால் அறிவதாலும் அவைகள் ஏற்படுகின்றன. தீர்க்கப்படாத இசைவுகளுடன் திருப்தியடைவது பயன்பாட்டு தன்மையுடைய விலங்கு தன்மையுடைய மனிதனுக்கு சாத்தியமே, ஆனால் முழு விழிப்புற்ற அவன் மனதிற்கு இது சாத்தியமேயில்லை. மேலும் வழக்கமாக மனிதனின் பயன்பாட்டு தன்மையுடைய மனதின் பகுதிகள், பிரச்சினைகளை கதவடைத்து விடுவதாலோ, மேலோட்டமான ,பயன்பாட்டு தன்மை மிக்க, ஒளியேதுமற்ற ஒரு சமரசத்தை ஏற்றுக்கொள்வதாலோ பொதுவான தேவையிலிருந்து தப்பித்துக்கொள்கின்றன. சாராம்சத்தில் இயற்கையின் அனைத்தும் இசைவையே தேடுகின்றன. மனம் தன் அறிதல் அமைப்பில் எந்தளவிற்கு இசைவை தேடுகின்றதோ அந்த அளவிற்கு சடமும் பிராணனும் தங்கள் பிராந்தியத்தில் தேடுகின்றன. உபயோகத்திற்கு வழங்கப்பட்ட கூறுகள் எந்த அளவிற்கு ஒன்றிற்கொன்று நேரெதிரானதாக, சமரசப்படுத்த முடியாத அளவிற்கு வெளிப்படையாக முரணானதாக தோன்றுகின்றதோ அந்த அளவிற்கு அதனால் பெறப்படும் ஒழுங்கு உயர்வானதாகவும் ,
வலிமையானதாகவும், பலஹீனமான முயற்சியினால் பெறப்படுவதை விடவும் மேலானதாகவும் இருக்கும், மேலும் அதன் உத்வேகமும் பலமானதாக இருக்கும். இயங்கும் தன்மை மிக மந்த நிலையில் இருப்பது போல் தோன்றும் ஒரு சட உருவில் இயக்க நிலையில் பிராணனை பொருந்த செய்தது ,எதிரிடைகளை சமன் செய்யும் இயற்கையின் முயற்சிகளுள் ஒன்று. மேலும் மிக அதிக சிக்கல்களை லாவகமாக சமரசப்படுத்தவே அவள் விழைகிறாள்; முழுமையாக சீரமைக்கப்பட்ட மனதினால் தாங்கப்பட்ட விலங்கு உடலே இதற்கான சரியான தீர்வாக இருக்கும். முழு அளவில் உணர்வு பெறாமல் ,இயந்திரத்தனமான அல்லது ஆழ்மனதின் இச்சா சக்தியினால் உணர்வு பெற்ற உருவையும், பிராணனையும், சுய உணர்வுடைய மனதுடனும், சுய உணர்வுடைய இச்சா சக்தியுடனும் பொருந்தச்செய்தது எதிரிடைகளின் பிரச்சினைகளில் அவள் கண்ட மற்றுமொரு வெற்றியாகும். மேலும் அவள் அதில் வியத்தகு விளைவுகளை எட்டியிருக்கிறாள். எப்போதும் அவள் உயர்ந்த அற்புதங்களையே குறிவைக்கிறாள். நேரடியான, ஒழுங்கமைந்த அறிவினால் பெறப்பட்ட பயன்பாட்டு தன்மையுடைய சர்வ வலிமையும், தேடிக்கொண்டிராமல் உண்மையையும் ,ஒளியையும் தன்னுள் கொண்டிருக்கும் விலங்கு உணர்வே அவளின் இறுதியான விந்தையாகும். அப்போது மேலும் பெரிதான எதிரிடைகளை நோக்கிய மனிதனின் மேல் நோக்கிய உந்துதல் சரியானது மட்டுமின்றி,இயற்கையின் அடிப்படையான செயல்பாடாக அமைந்த ஒரு முயற்சியையும், சட்டத்தையும் நியாயமாக நிறைவு செய்ததாகவும் ஆகும். அதுவே அவளின் பிரபஞ்ச போராட்டத்தின் அர்த்தமும் ஆகும்.
சடத்திலிருந்து பிராணன் பரிணமிப்பதையும், பிரணானலிருந்து மனம் பரிணமிப்பதையும் பற்றி நாம் பேசுகிறோம்; ஆனால் பரிணாமம் என்னும் பதம் அதனை முழுமையாக விவரிக்காமல் மேலோட்டமான நிகழ்வினை சொல்கிறது. பிராணன் முன்னரே சடத்தில் ஒடுங்கியிருந்ததென்றும், மனம் முன்னரே பிராணனில் ஒடுங்கியிருந்ததென்றும் கூறும் வேதாந்தத்தின் தீர்வை நாம் ஏற்றுக்கொள்ளாத வரையில், சடத்தின் கூறுகளிலிருந்து பிராணன் பரிணமிப்பதையும், பிராணனிலிருந்து மனம் பரிணமிப்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள எந்தவித காரணமுமிருப்பதாக தோன்றவில்லை. ஏனெனில் சாரம்சத்தில் சடம் என்பது திரையிடப்பட்ட பிராணனின் வடிவமும், பிராணன் என்பது திரையிடப்பட்ட உணர்வின் வடிவமுமாகும். இந்த ரீதியில் தொடர்ச்சியாக மேற்செல்ல எந்தவித தடையுமில்லை. மேலும் மன உணர்வு அதற்கு மேலுள்ள
உயர் உணர்வு நிலைகளின் ஒரு வடிவமும், திரையிடப்பட்ட நிலையுமாகும் என்பதையும் அனுமதிக்கலாம். சடத்தின் சில வடிவங்களில் பிரணானை நோக்கி அவள் விதைத்துள்ள துடிப்பும், பிராணனின் சில வடிவங்களில் மனதை நோக்கி அவள் ஏற்படுத்தியுள்ள துடிப்பும் எவ்வளவு உண்மையானதோ, இயல்பானதோ, நியாயமானதோ அதே அளவிற்கு கடவுள், ஒளி, சுதந்திரம், அமரத்துவம் இவற்றின் மேல் மனிதனுக்குள்ள அடக்கமுடியாத துடிப்பாக வெளிப்பட்டு ,இயற்கையின் சங்கிலியில் தன்னை சரியாக இருத்திக்கொண்டு, இயற்கை தன் கட்டாய உந்துதலால் மனிதனை தாண்டி மேலே செல்ல முயல்கிறது. மனதின் கீழ்தளங்களில் ஏற்பட்ட உந்துதலைப்போலவே, மனதிலும் அவளின் பலவகையான கலங்களில் தொடர்ந்து மேற்செல்லும் படிகளில் வெளிப்பட வேண்டிய ஆற்றலின் துடிப்பு சற்றேறக்குறைய இருளாக தோன்றுகிறது. அங்கு ஏற்பட்டதைப்போலவே இங்கும் , மெதுவாக படிப்படியாக மேலேறிச்செல்லவும், தேவையான உறுப்புகளையும், திறமைகளையும் வெளிப்படுத்த இயற்கை கட்டுப்பட்டுள்ளது. தாவரங்களிலும், உலோகத்திலும் துவங்கிய பிராணனின் மனதை நோக்கிய நுண்ணிய துடிப்பு , மனிதனில் முழு அமைப்பாக நிறைவுறுவதைப்போல, மனிதனிலிருந்தும் மேற்செல்லும் தொடர்ச்சியான அதே படிவரிசை அவனுடைய உயர், பரிபூரண வாழ்விற்கான தயார் நிலையாக அமைகின்றது. உயிருள்ள சோதனைச்சாலையான விலங்கிலிருந்தே இயற்கை மனிதனை வெளிக்கொணர்ந்தாள் என்று சொல்லப்படுகின்றது. மனிதன் அவனளவில் சிந்திக்கக்கூடிய உயிருள்ள சோதனைச்சாலையாக அமைந்து ,அவனுடைய உணர்வுள்ள ஒத்துழைப்புடன் அவனிடமிருந்து அதிமனிதனையோ, கடவுளையோ இயற்கை உருவாக்க யத்தனிக்கிறாள். மேலும் கடவுளை பரிணமிக்க செய்கிறாள் என்று ஏன் சொல்லக்கூடாது?. பரிணாமம் என்பது இயற்கை தன்னுள் உறக்க நிலையில் இருப்பதை, தன்னுள் செயல்புரிவதை, தன்னுள் ஒடுங்கியிருப்பதை மேல்நிலையில் வெளிப்படுத்துவது மட்டுமின்றி, தான் ரகசியமாக எதுவாக இருக்கின்றதோ அதை உணர்வதுமாகும். எனில் பரிணாமத்தின் ஒரு குறிப்பிட்ட நிலையில் இத்தோடு நின்று விடும்படி நாம் இயற்கையை வற்புறுத்த எவ்வித உரிமையும் இல்லை. மேலும் நாம் மதவாதிகளுடன் சேர்ந்துகொண்டு அதனை வக்கிரம் அல்லது அதிக பிரசங்கித்தனம் என்று கண்டிக்கவோ ,அல்லது காரண காரிய வாதிகளுடன் சேர்ந்து கொண்டு அதனை ஒரு நோய் அல்லது பிறழ்வு (hallucination) என்று நாம் கண்டிக்கவோ முயன்றால்,இயற்கை மேலே செல்வதற்கான நோக்கத்தையோ அல்லது முயற்சியையோ வெளிப்படுத்துவாள். ஆன்மா சடத்தில் ஒடுங்கியிருப்பதும், வெளிப்பட்ட இயற்கை ரகசிய கடவுளாயிருப்பதும் உண்மையானால், இறைவனை அவனுள்ளேயே வெளிப்படுத்த செய்வதும், அகத்திலும் புறத்திலும் அவனை உணர்வதுமே , மிக உயர்ந்த ,மிக நியாயமான, புவியில் சாத்தியமாகக்கூடிய மனிதனின் இலட்சியமாகும்.

இவ்வாறு விலங்கின் உடலில் பரிபூரண வாழ்வைப்பற்றிய நித்யகால முரணுண்மையும், (PARADOX) நித்ய கால உண்மையும், சிதைவுறும் குடிலில் வசிக்கும் ஒரு அமரத்துவமான அல்லது உண்மையின் ஆர்வமும், ஒரு தனித்த பிரபஞ்சம் தழுவிய உணர்வு தன்னை எல்லைக்குட்பட்ட மனங்களாகவும், பிரிவுற்ற அகந்தையாகவும் , அடையாளப்படுத்திக்கொள்வதாலும், ஒரு பரம்பொருள், விளக்கமுடியாததும், காலமற்றதும், இடமற்றதுமான இருப்பு காலத்தையும், இடத்தையும், பிரபஞ்சத்தையும் வழங்கி, இவற்றினுள்ளே உயர் உண்மை கீழ்முனைகளால் உணரும்படியும், திடமான காரணத்திற்கும், மனித இனத்தின் இடைவிடாத உளக்குறிப்பையும், உள்ளுணர்வையும் நியாயப்படுத்துகிறது.
தர்க்க ரீதியான சிந்தனையினால் தீர்க்கவே முடியாதென்று பலமுறை கைவிடப்பட்ட கேள்விகளை, இறுதியாக ஒரு முடிவெடுத்து இத்தோடு விட்டு விடுவதென்றும், பிரபஞ்சத்தின் சட தளத்தோடு சார்ந்த உடனடியான பிரச்சினைகள் மற்றும் பயன்தன்மை குறித்து மட்டும், மனிதன் தன் சிந்தனைகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சில சமயங்களில் முயற்சி நடந்தது ; ஆனால் இம்மாதிரியான தப்பித்தல்கள் ஒருபோதும் நிரந்தரமான விளைவை தராது. இவற்றிலிருந்து மனித இனம் மீண்டும் மூர்க்கமான ஆய்வு நோக்குடனும், உடனடி தீர்விற்கான அகோரப்பசியுடனும் திரும்பவும் வருகின்றது. இந்த அகோரப்பசியினால் மெய்யுணர்வியல் (mysticism) லாபமடைந்தது. ஆய்வு செய்வது மதங்களின் பணியாக இருந்தும் அவ்வாறு ஆய்வு மேற்கொள்ளாத மதங்கள் சந்தேகவாதத்தை திருப்தியுற செய்ய இயலாததால் தங்கள் முக்கியத்துவத்தை இழந்து புதிய மதங்கள் தோன்றவும் காரணமாகின்றன. இருள்மயமான மூட நம்பிக்கையாலும், உக்கிரமான விசுவாசத்தாலும் உண்மை அடிக்கடி அடையாளப்படுத்தப்படுவதாலும், புறவயமான செயல்பாட்டில் அது இருளாக தோன்றுவதாலும் அதனை மறுக்கவும் ,குரல்வளையை நெறிக்கவும் முற்படுவது ஒருவகையான இருள்மய வாதமே (obscurantism). உடனடியாக வசப்படும் தீர்வுகளிலிருந்து நியாயப்படுத்திக்கொள்ள கடினமாகத்தோன்றுவதாலும், தன் செயல்பாடுகளை முறைப்படுத்துவதில் மிக மந்தமாக இருப்பதாலும், பிரபஞ்ச தேவையை அணுகுவது கடினமாக இருப்பதாலும் அதிலிருந்து தப்பிக்க முயல்வது, இயற்கையின் உண்மையை ஏற்க மறுப்பதோடு மட்டுமல்லாமல், பிரபஞ்ச அன்னையின் ரகசியமான வலிமையான இச்சா சக்திக்கு எதிரான கலகமாகவும் ஆகிவிடும். ஒதுக்கப்படும் இனமாக நம்மை விட்டு விடாமல், குருட்டு உளக்குறிப்பும், இருளான உள்ளுணர்வும், தாறுமாறான ஆர்வமும் சார்ந்த தளத்திலிருந்து மாற்றி ஒளி பொருந்திய காரணமும், அறிவுறுத்தப்பட்ட, உணர்வுடைய தன்னைத்தானே வழி நடத்திக்கொள்ளும் இச்சா சக்தியுமுள்ள தளத்தை நோக்கி அவள் அழைத்து செல்வதை ஏற்றுக்கொள்வதே சிறந்ததும் அறிவுடையதுமாகும். மனிதனில் தற்போது ஒளிமிக்க உள்ளுணர்வின் உயர் ஒளியோ அல்லது சுயமாய் வெளிப்படும் உண்மையோ தடைபட்டோ அல்லது இயக்கமின்றியோ அல்லது திரைக்குப்பின்னின்று அவ்வப்போது கீற்றுகளாக வெளிப்பட்டாலும், அல்லது அரிதாக வானின் வடக்கு பகுதியில் அவ்வப்போது தோன்றும் ஒளியைப்போல் வெளிபட்டாலும், மேலும் ஆர்வம் கொள்ள நாம் பயப்பட தேவையில்லை. அநேகமாக இதுவே மனதை தாண்டிய உயர் உணர்வு நிலையாக அமைந்து, மனம் அதனுடைய உருவும், திரையிடப்பட்ட வடிவமுமாக ஆகி, அந்த பெருமைமிக்க ஒளியின் வழியே மனித இனத்தின் இறுதியான ஒய்விடத்திற்கான நம்முடைய
சுய விரிவு கண்டு மேலேறிச்செல்லும் பாதை இருக்கிறது.

Advertisements